All NewsNews
மகா சங்கத்தினரின் சரியான வழிகாட்டல் சமூகத்தின் முன்னோக்கிய பயணத்திற்குப் பெரும் பக்கபலமாகும்
AntonrajAugust 24, 2026

செய்த ஆசிரியர் ஆர்.
அஜித் குமார்
மகா சங்கத்தினரின் சரியான வழிகாட்டல் சமூகத்தின் முன்னோக்கிய பயணத்திற்குப் பெரும் பக்கபலமாகும்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
தற்போதைய போட்டி நிறைந்த சமூகத்தில் பரஸ்பர இரக்கம், ஒழுக்கம், நேர்மை மற்றும் மனக்கட்டுப்பாடுடன் செயற்படுவதன் முக்கியத்துவம் எப்போதையும் விட இன்று வெகுவாக உணரப்பட்டு வருவதாகவும், இல்லற மக்களை ஒழுங்குபடுத்தி, குரோதமும் வஞ்சனையுமற்ற ஆன்மீக ரீதியில் நிறைவடைந்த குடிமக்களை உருவாக்கும் பாரிய பொறுப்பு மகா சங்கத்தினருக்கு இருப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டச் செயலகப் பிரதான கேட்போர் கூடத்தில் ஆகஸ்ட் 22 ஆம் திகதி நடைபெற்ற சியனே மற்றும் ஹாபிட்டிகம் கோரளை ஆகிய இரண்டினதும் பிரதான அதிகரணச் சங்கநாயக பதவி வழங்கும் விழாவில், ராஜகீய பண்டிதர் வணக்கத்திற்குரிய பெலும்மஹர இன்தானந்த தேரர் அவர்களுக்கு "சத்தர்மகீர்த்தி ஸ்ரீ அனோமதஸ்ஸி" என்ற கௌரவப் பட்டத்திற்கான சன்னஸப் பத்திரத்தை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது மல்வத்து மகா விகாரைப் பிரிவினால் வழங்கப்பட்ட ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தினைப் பிரதமர் தேரர் அவர்களுக்கு வழங்கி வைத்ததுடன், பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க விசிறியினை வழங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
எமது கலாச்சார, ஆன்மீக மற்றும் சமூக அடித்தளத்தைப் பாதுகாத்த பிரதான முன்னோடிகள் மகா சங்கத்தினரே என்றும், ஒரு நாடாக நாம் எதிர்கொள்ளும் சிக்கலான பொருளாதார மற்றும் சமூகச் சவால்களை வெற்றிக் கொள்ள வேண்டுமாயின், ஒழுக்க நெறிமுறை சார்ந்த அடித்தளத்தில் நிலைபெற்ற கட்டுப்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றைக் கட்டியெழுப்புவது அத்தியாவசியமானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பிரச்சினைகளின்போது கோபம் கொள்ளாது அமைதியாகவும் மனிதநேயத்துடனும் தீர்மானங்களை எடுப்பதற்கும், பொறுமையையும் நடுநிலைமையையும் முதன்மைப்படுத்தி முன்னோக்கிச் செல்வதற்கும் மகா சங்கத்தினரின் அறிவுரைகளும் வழிகாட்டல்களும் அத்தியாவசியமானவை என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.
புதிய பதவியினைப் பெற்ற பெலும்மஹர இந்தானந்த நாயக்க தேரரின் சமூகப் பணிகளைப் பாராட்டிய பிரதமர், தேரர் அவர்கள் பெண்டியமுல்ல ஸ்ரீ வித்யாசேகர மகா பிரிவேனாவின் பரிவேணாதிபதியாகவும், ஸ்ரீ சரணங்கரத் தருமப் பாடசாலையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றி நற்பண்புகளும் அறிவும்மிக்கத் தலைமுறையொன்றை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் என்றும் தெரிவித்தார்.
அத்தோடு திரிபிடக தர்ம போதனைகளையும் சாஸ்திர பாரம்பரியத்தையும் பாதுகாத்துப் பாளி மொழியை மேம்படுத்துவதற்கும், துறைசார் நூல்களை எழுதுவதற்கும், கம்பஹா பிரதேச கலைக் குழு மற்றும் இளைஞர் பௌத்த சங்கம் போன்ற அமைப்புகளுக்கு அனுசரணை வழங்குவதிலும், மகா சங்கத்தினரின் பணியானது விகாரைக்கு மாத்திரம் வரையறுக்கப்படாது பொதுமக்களுக்காகச் செயற்படும் ஒரு தலைமைத்துவம் என்பதைத் தேரர் அவர்கள் நடைமுறை ரீதியாகவே உறுதிப்படுத்தியிருக்கின்றார் என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டைப் புதிய மாற்றத்தை நோக்கி இட்டுச் சென்று அனைவருக்கும் சமமான மற்றும் நியாயமான சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதில் மகா சங்கத்தினரிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பையும் பாராட்டினார்.
மல்வத்து மகா விகாரைப் பிரிவின் அனுநாயக அதிவணக்கத்திற்குரிய நியங்கொட ஸ்ரீ விஜிதசிரி அனுநாயகத் தேரர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், கன்னியாஸ்திரிகள், தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கம்பஹா மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், கௌரவ விருந்தினர்கள் மற்றும் விகாரையின் அங்கத்தவர் சபை உறுப்பினர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு



