All NewsNews
ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில்
AntonrajAugust 20, 2026

செய்தி ஆசிரியர்
ஆர்.அஜித்குமார்
ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கூற்று முற்றிலும் பொய்யானது
அதிபர்களை நியமிக்கும் நடைமுறையை மேலும் முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
அதிபர்களை நியமிக்கும் நடைமுறை நீண்டகாலமாக முறைப்படி நடைபெறாததால், அதனை முறைப்படுத்துவதற்காக தற்போதுள்ள நடைமுறையை மறுபரிசீலனை செய்து, அரச சேவை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி தேவையான மாற்றங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்கும்போது அடிப்படைக் கல்வித் தகுதிகளுக்கு மேலதிகமாக ஏனைய செயல்திறன் தகுதிகளும் கவனத்திற்கொள்ளப்படுகின்றனவா என, பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவீர எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கல்வி மறுசீரமைப்புகளின் கீழ் மனிதவள அபிவிருத்திக்கென தற்போதுள்ள நடைமுறை மற்றும் தொடர்புடைய அனைத்துச் சுற்றறிக்கைகளையும் மறுபரிசீலனை செய்து, அதிபர்களைத் தெரிவுசெய்யும்போது வெறுமனே கல்வித் தகுதிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல், ஏனைய தொழில்சார் திறன்களையும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உடன்படுவதாகப் பிரதமர் தெரிவித்தார்.
அதிபர்களின் ஆளுமை அபிவிருத்திக்காகக் கல்வி அமைச்சினால் தற்போது பல பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் ஆளுமை அபிவிருத்திக்காக முறையான செயல்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கும், தேசிய கல்வி நிறுவனத்தின் ஊடாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பலப்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை 2027 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கும் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், இம்மாதத்திற்கான ஆசிரியர்களின் சம்பளம் கிடைக்காது என எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் ஆகஸ்ட் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்த கூற்று தொடர்பிலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், அக்கூற்று முற்றிலும் பொய்யானது என்பதை வலியுறுத்தினார்.
ஆசிரியர்களின் சம்பளம் கிடைப்பது தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும், அவர்களுக்கு உரிய நேரத்தில் உரியவாறு சம்பளம் கிடைக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.



