All NewsNews
வி.எம். சந்திரசேகரன் காலமானார்
AntonrajAugust 13, 2026

சித்தாரா இசைக்குழுவின் முன்னாள் மேலாளர் வி.எம். சந்திரசேகரன் காலமானார்
இலங்கையின் தமிழ் இசைத்துறையின் வளர்ச்சிக்காகத் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை அர்ப்பணித்த சித்தாரா இசைக்குழுவின் முன்னாள் மேலாளர் திரு. வி.எம். சந்திரசேகரன் அவர்கள், 2026 ஆகஸ்ட் 13ஆம் திகதி இறைவனடி சேர்ந்தார். 1959 மார்ச் 18ஆம் திகதி பிறந்த அவருக்கு வயது 67.
தமிழ் இசையின் மீது ஆழ்ந்த பற்றுக்கொண்டிருந்த சந்திரசேகரன் அவர்கள், இலங்கையில் தமிழ் இசையை வளர்த்தெடுப்பதிலும், இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர். குறிப்பாக, சித்தாரா இசைக்குழுவின் ஊடாகப் பல இசைக் கலைஞர்கள் உருவாகவும், அவர்களுடைய திறமைகள் மக்கள் மத்தியில் அறிமுகமாகவும் அவர் உறுதுணையாக இருந்தார்.
வளர்ந்துவரும் பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய வாய்ப்புகளையும் மேடைகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார். பல இசைக் கலைஞர்களை அறிமுகப்படுத்தியதுடன், அவர்கள் இசைத்துறையில் தங்களுக்கெனத் தனித்துவமான இடத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் வழிகாட்டியாக விளங்கினார்.
சித்தாரா இசைக்குழுவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய அவர், இசைக்குழுவின் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்து, இலங்கையின் பல பகுதிகளிலும் தமிழ் இசை ரசிகர்களைச் சென்றடையச் செய்தார். தமிழ் இசை நிகழ்ச்சிகளின் தரத்தையும் புகழையும் உயர்த்துவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவரது சேவை, இலங்கைத் தமிழ் இசைத்துறையின் வரலாற்றில் நினைவுகூரத்தக்கதாகும்.
இசைக் கலைஞர்களுடன் அன்புடனும் நட்புடனும் பழகிய அவர், திறமையான இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதில் எப்போதும் முன்னின்றார். Sithara இசைக்குழுவில் பகுதிநேர Keyboardist டாக கடமையாற்றியபோது, முதன்முதலாக என்னை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றவர் அவர்தான் ஓர் இசைக்குழுவின் மேலாளராக மட்டுமன்றி, கலைஞர்களின் வழிகாட்டியாகவும் நம்பிக்கைக்குரிய நண்பராகவும் அவர் திகழ்ந்தார். அவரது மறைவு குடும்பத்தினருக்கு மாத்திரமன்றி, இலங்கையின் தமிழ் இசைத்துறைக்கும் இசை ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.
அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து மற்றும் ஜெயமணி ராதா தம்பதியரின் அன்பு மகனும், சரோஜா அவர்களின் அன்புக் கணவரும், லோகதர்ஷினி அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக ராஜகிரியவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள் 2026 ஆகஸ்ட் 15ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் பூதவுடல் பொரளை பொதுமயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
தமிழ் இசைக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைகளும், அவர் உருவாக்கி அறிமுகப்படுத்திய இசைக் கலைஞர்களும் அவரது பெயரைத் தொடர்ந்து நினைவுபடுத்துவார்கள். அன்னாரின் மறைவால் ஆழ்ந்த துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், இசைக் கலைஞர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்
Keyboardist / Music Director: R. Antonraj T.P : 0769933998

